ஜெர்மனியில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் – உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவு
ஜெர்மனியில் சிரியாவை சேர்ந்தவர்கள் தஞ்சம் கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
சிரியாவை சேர்ந்த குற்றவாளிகளை முதலில் நாடு கடத்த அரசாங்கம் ஏற்கனவே தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விவாதிக்க சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை ஜெர்மனிக்கு அழைத்ததாகவும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் சிரியாவுக்கு விஜயம் செய்த வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் மெர்ஸின் கருத்துடன் உடன்படவில்லை.
சிரியா இன்னும் பாதுகாப்பற்றது என்றும் அங்கு பலர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கள் CDU கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், சிரியாவில் நிலைமை சீராக இல்லாத போதிலும் சிரியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
எனினும், பசுமை கட்சி மற்றும் SPD உறுப்பினர்கள் உட்பட பிற ஜெர்மன் அரசியல்வாதிகள் வடேபுலின் கருத்தை ஆதரிக்கின்றனர்.
சிரியாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருப்பதால் அங்கு திரும்புபவர்களுக்கு பாதுகாப்பு அல்லது கண்ணியத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அவர்கள் வாதிடுகின்றனர்.
நிலைமை மேம்படும் வரை பெருமளவில் நாடு கடத்தப்படக்கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, சுமார் 1.3 மில்லியன் சிரியர்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சுமார் எட்டு ஆண்டுகளாக அகதிகள் பாதுகாப்பு அந்தஸ்துடன் அங்கு வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





