7 மாதங்களில் 3வது முறையாக அமெரிக்கா செல்லும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் 7 ஆம் திகதியன்று அமெரிக்காவுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, கடந்த ஜூன் 24 ஆம் திகதியன்று 12-ம் நாளை எட்டியதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.
அதனை ஏற்ற இருநாடுகளும், தங்களது தாக்குதல்களை நிறுத்தியதுடன். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் திகதியன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம், கடந்த ஜனவரியில் அதிபர் டிரம்ப்பின் ஆட்சி அமைந்தது முதல், 3-வது முறையாக பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இதனால், பிரதமர் நெதன்யாகுவின் இந்தப் பயணத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கடந்த ஜூன் 27 ஆம் திகதியன்று, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், அடுத்தவாரத்துக்குள் காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவரப்படக்கூடும் எனக் கூறியிருந்தார். இருப்பினும், போர்நிறுத்த நடவடிக்கைகள் குறித்து மற்ற எந்தவொரு தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.