இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் – பாகிஸ்தான் மிரட்டல்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம்பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தாங்கள் விரும்பும் நேரத்தில் தக்க பதிலடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சில மணி நேரங்களுக்கு முன்பு, கோழைத்தனமான எதிரியான இந்தியா, பஹ்வல்பூரின் அகமது கிழக்குப் பகுதியில் உள்ள சுபானுல்லா மசூதி, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய மூன்று இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
எங்கள் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் பாகிஸ்தானின் எல்லைக்குள் வந்து ஊடுருவ அனுமதிக்கப்படவில்லை. நான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்கிறேன். பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும். இந்த கொடூரமான ஆத்திரமூட்டும் நிகழ்வு பதிலளிக்கப்படாமல் போகாது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.