இலங்கை கடற்படை படகுடன் மோதி இந்திய மீனவர் பலி: இந்தியா கடும் கண்டனம்
நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு தமிழக அரசு பலமுறை கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உரிய தூதரக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இன்னும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
அவர்களைக் கைது செய்வதற்கு இலங்கை கடற்படை முயற்சித்த போது, மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஏனைய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில், புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.