இலங்கை செய்தி

வடக்கில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளியும் இச்சந்திப்பில் பங்கேற்றார்.

இச்சந்திப்பின்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி மற்றும் காரைநகர் படகுக் தள அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநருடன் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.

அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடரின் பின்னரான உதவித் திட்டங்கள் குறித்தும், இந்தியாவின் ‘அயலவருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் தொடர்பிலும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டித்வா பேரிடரின்போது இந்திய அரசாங்கம் வழங்கிய உடனடி உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்புக்களைப் பாராட்டினார்.

பலாலி விமான நிலையத்தின் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் அதன் ஏனைய விரிவாக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதி உயர்ஸ்தானிகர், முதலீட்டு வலயங்கள் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர், இந்திய முதலீட்டாளர்களை நிச்சயம் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க முடியும் என உறுதியளித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!