தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண NPP அரசாங்கத்திற்கு அழைப்பு!
இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்குரிய வழிவகைகள் பற்றி பேசப்பட்டது. இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதன்மூலம் இந்நாடு நன்மையடையக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் முதலீடுகளை செய்வதற்கு முன்வரக்கூடும். இதன்மூலம் அவர்களிடமிருந்து பொருளாதாரத்துக்கு பங்களிப்பு பெற்றுக்கொள்ள முடியும்.
இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புகூறல் அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரம் மற்றும் மீள்நிகழாமை என்பன பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இந்த ஆட்சியிலும் முன்னேற்றம் தென்படவில்லை. இது பற்றியும் கவனம் செலுத்தப்படவேண்டும்.” எனவும் ஸ்ரீநேசன் எம்.பி. குறிப்பிட்டார்.





