உக்ரைன், காசா ஒப்பீடு – சர்ச்சைக்குரிய கேள்வியால் வேலையிழந்த ஊடகவியலாளர்
காசா பகுதியின் புனரமைப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதற்காக ஊடகவியலாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் முன்னணி செய்தி நிறுவனமான அஜென்சியா நோவா, அதன் ஊடகவியலாளரை பணிநீக்கம் செய்துள்ள இந்தச் சம்பவம் தற்போது இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேப்ரியல் நுன்சியாட்டி என்பவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 13 ஆம் திகதி நடந்த ஐரோப்பிய ஒன்றிய செய்தியாளர் சந்திப்பில் குறித்த ஊடகவியலாளர் கேள்வியைக் எழுப்பியுள்ளார்.
அதில், “உக்ரைன் புனரமைப்புக்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என நீங்கள் பல முறை கூறி வருகிறீர்கள். அப்படி என்றால், காசாவில் உள்ள சிவில் உள்கட்டமைப்பை கிட்டத்தட்ட முழுமையாக அழித்த இஸ்ரேலும் புனரமைப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்தக் கேள்விக்குப் பிறகு சில வாரங்களில், நுன்சியாட்டியின் கேள்வி தொழில்நுட்ப ரீதியாகத் தவறானது எனவும், இது நிறுவனத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி, அஜென்சியா நோவா நிறுவனம் அவரது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.





