சரிவுப் பாதையில் பிரித்தானியாவின் வீட்டு விலைகள்
மத்திய கிழக்கில் இடம்பெற்ற போரின் விளைவாக, அடமானக் கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்ததால் வீடுகள் வாங்கும் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மார்ச் மாதத்தில் பிரித்தானியாவின் சராசரி வீட்டு விலைகள் 0.5% வீழ்ச்சியடைந்ததாக ஹாலிஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது,பிரித்தானியாவில் சராசரி சொத்து விலை £299,677 ஆக இருப்பதுடன், ஆண்டு வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளது.
இதற்கு முன்பு, பெப்ரவரி மாதத்தில் 0.3% உயர்வு பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சரிவு அந்த உயர்வை மாற்றியுள்ளது.
போர் காரணமாக எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் பணவீக்கம் உயரும் என்ற அச்சமும், இந்த ஆண்டில் வட்டி விகிதங்கள் குறையாமல் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களில் அடமானக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்ததால், நூற்றுக்கணக்கான குறைந்த வட்டி சலுகைகள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த மந்தநிலை மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையின் பிரதிபலிப்பென ஹாலிஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி விலை உயர்வு , பணவீக்கம், வட்டி உயர்வு , வீட்டு சந்தை மந்தம் என்ற தொடர் தாக்கமே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.





