ஈரானை கற்காலத்திற்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் சபதம்!
போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக, “ஈரானின் மிகப்பெரிய பாலம்” தகர்க்கப்படும் காட்சிகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
“ஈரானின் மிகப்பெரிய பாலம் மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளியை பகிர்ந்துள்ள ட்ரம்ப் “காலம் கடந்து, ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கக்கூடிய எதுவும் மிஞ்சாத நிலைக்குச் செல்வதற்கு முன், ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் இது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்க இராணுவம் தனது இலக்குகளை ஏறக்குறைய அடைந்துவிட்டதாகவும், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் திறன்களைக் கணிசமாகக் குறைத்து, அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்நாட்டை “கற்காலத்திற்குத் திருப்பி அனுப்பும்” வகையில் குண்டுவீச்சு நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





