ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (28.08) இடம்பெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி செப்டெம்பர் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் தங்கியிருக்குமாறும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இந்த திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை புறக்கணிக்க ஆளும் கட்சியின் குழுவொன்று தயாராகி வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது, அதற்கு ஆளும் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.