புத்தாண்டு தீ விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க தயாராகும் சுவிஸ்!
கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ஸ்கை ரிசார்ட்டில் புத்தாண்டு தினமன்று ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக 50,000 சுவிஸ் பிராங்குகளை (S$81,660) வழங்குவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்குவதையும், இரக்கத்தின் அடையாளமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஆளும் கூட்டாட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டாட்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கையளவில், இந்த இழப்பீடு தனது உயிரை இழந்த ஒவ்வொரு நபருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கை பர்மெலின் (Guy Parmelin) “உண்மை மற்றும் நீதிக்கான விருப்பத்தை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கூட்டாட்சி கவுன்சில் பகிர்ந்து கொள்கிறது” என்று கூறியுள்ளார்.




