புலிகளுக்கே அஞ்சாதவர்கள்தான் இலங்கை புலனாய்வாளர்கள்: மார்தட்டுகிறார் நாமல்!
“போர் காலத்தில் புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், இந்த ஆட்சியாளர்களுக்கு அஞ்சமாட்டார்கள்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில புத்தகம் வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் நாமும் ஆராய்ந்தோம். சில விடயங்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, விசாரணைகளை வேறு வழியில் கொண்டுசெல்வதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.
முறையற்ற விதத்தில் சாட்சியங்களை திரட்டி, புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
புலனாய்வாளர்கள், புலிகளுக்கே அஞ்சாதவர்கள். எனவே, இவர்களின் (ஆட்சியாளர்களின்) அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டார்கள். அவர்கள் நாட்டுக்காக முன்னிலையானவர்கள்.
எமது ஆட்சிகாலத்தில் நாம் நிச்சயம் புலனாய்வாளர்களுக்கு நீதியை வழங்குவோம்.” என்றார் நாமல் ராஜபக்ச.





