இலங்கை – தென்னாபிரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் Air Vice Marshal Sampath Thuyacontha, இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவருக்கும் Sandile Edwin Schalk இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) நடைபெற்றது.
இச்சுமூக சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு நலன்கள் தொடர்பான துறைகளில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பாதுகாப்பு செயலாளர், இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கிடையிலான நீண்டநாள் நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை நினைவுகூர்ந்து பாராட்டுத் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க தூதுவர், வழங்கப்பட்ட உளமார்ந்த வரவேற்பிற்காக தனது நன்றியைத் தெரிவித்ததுடன், பரஸ்பர நலன்களை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் தென்னாபிரிக்க தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





