சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!
டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
“டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.
அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் தாண்டி வேகமாக முன்னேறுவதற்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்ட வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றது.
இது குறித்துப் பேசும்போது, அரசாங்கம் இதில் அலட்சியமாக இருப்பது போலவே தெரிகிறது.
உலக வங்கி நடத்திய மதிப்பீட்டின் பிரகாரம், உட்கட்டமைப்பு வசதிகளில் மட்டும் 4.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், நமது நாடு இதுவரை பெற்றுள்ள நன்கொடைத் தொகை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையே நெருங்கியுள்ளது.
வாழ்வாதாரங்கள் சீரழிந்துபோய், பல தொழில்கள் அழிந்து போயுள்ளன.
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
கூறிய விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள்.
அவ்வாறே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுங்கள். தாமதமின்றி உலகின் கவனத்தை நாட்டின் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.” – என்றார் சஜித் பிரேமதாச.





