ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!
இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. மேலும், காவல்துறையின் நடவடிக்கை குறித்து சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் காவல்துறையின் நடவடிக்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய காவல்துறை கண்காணிப்பு ஆணையம் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் மதச்சார்பற்ற உரிமைகள், போராட்ட சுதந்திரம் மற்றும் காவல்துறையின் அதிகாரப் பயன்பாடு குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.





