ஆப்கானிஸ்தான் முகாம்களில் பாகிஸ்தான் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு
பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ள சில முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்குவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலிபான் (TTP) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குச் சொந்தமான ஏழு முகாம்கள் மற்றும் மறைவிடங்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கைகளை எடுத்ததாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்டுள்ளது.
மேலும், இஸ்லாமாபாத்திலும், வடமேற்கு பஜௌர் மற்றும் பன்னு மாவட்டங்களிலும் சமீபத்திய தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட குழுக்களின் உத்தரவின் பேரில் நடந்ததாக பாகிஸ்தான் அமைச்சகம் கூறியுள்ளது.
நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள மதப் பாடசாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை தாக்கியதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துவிட்டதாகவும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம், இந்த தாக்குதல்களை “சர்வதேச சட்டத்தை மீறும்” செயல் என்றும், பாகிஸ்தான் இராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
நகர்ஹாரின் பிஹ்சுத் மாவட்டத்தில் ஏற்பட்ட தாக்குதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




