UKவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து பாரிய நிதிமோசடி – சிறை செல்லும் குற்றவாளி!
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த நபர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்றவியல் ஏஜென்சியின் விசாரணைகளை தொடர்ந்து பிராட்ஃபோர்டைச் (Bradford) சேர்ந்த 32 வயதான சிப்டைன் ஹுசைன் (Sibtain Hussain) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் பல்கலைக்கழக மாணவர்களிடம் ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ ஆகியவற்றுக்கான ஆதாரங்களை பெற கட்டணங்களை வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப்பெயர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கிய ஹுசைன், 2018 ஆம் ஆண்டில் லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் (Lancaster University) இருந்து தகவல்களை திருடி அதனை மோசடிக்கு பயன்படுத்தியுள்ளார்.
அந்த தரவுகளை பயன்படுத்தி 200 பேரை குறிவைத்த அவர், ஒவ்வொருவரிடம் இருந்தும் £3,200 பவுண்ட்ஸ் வரை கோரியுள்ளார். இதன்படி 23 மாணவர்கள் சுமார் £48,000 க்கும் அதிகமான பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த மோசடி £493,000 க்கும் அதிகமான சட்டவிரோத லாபத்தை ஈட்டும் திறனைக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் குறிவைக்கப்பட்டதாக அறிக்கைகள் கிடைத்ததை அடுத்து, லங்காஸ்டர் பல்கலைக்கழகம் ஜூலை 2019 இல் NCA க்கு தரவு மீறல் குறித்து முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹுசைன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு பணப்பை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பணப்பையில் அவர் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவர் ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆனால் பின்னர் அக்டோபர் 2025 இல் லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மோசடிக்காக நான்கரை ஆண்டுகள் மற்றும் பணமோசடிக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.




