“வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம்” – ஆளுநர் அறைகூவல்
” கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம்.” – என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், எமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாம் உரிய முறையில் பயன்படுத்தி, மாகாணத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
வாய்ப்புகளைத் தவறவிட்டால் அவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே எனக் குறிப்பிட்ட ஆளுநர், எமக்குத் தேவையானவற்றை நாமே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் வடக்கு மாகாண சபையின் பல திணைக்களங்களை, படிப்படியாக மாங்குளத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தலைமைப் பணிமனை மற்றும் வடக்கு மாகாணப் பணிமனை அதிகாரிகள், ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.





