பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ்; ஆவலுடன் பூர்வீக கிராம மக்கள்
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு மாற்றாக தற்போதைய துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என வாஷிங்டன் நகரிலிருந்து 12,900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் இந்தியாவின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரம்.அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றபோது கிராமமே அல்லோலகல்லோலம் பட்டது.அவரை வாழ்த்தும் பதாகைகளை ஏந்தியும் பட்டாசுகளை வெடித்தும், கோயிலில் வழிபட்டும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.இம்முறை அவர் ஒரு படி முன்னேறி உயர் பதவியை எட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமெரிக்காவில் படிப்பதற்காக குடியேறிய ஜமைக்கா தந்தைக்கும் இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பின்வாங்கினால் அவருக்குப் பதிலாக போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருக்கிறார்.இருந்தாலும் தேர்தல் களத்திலிருந்து விலகப் போவதில்லை என்று ஜோ பைடன் உறுதியுடன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது மனநிலை, உடலுறுதி குறித்து கவலைப்படும் நன்கொடையாளர்களையும் கட்சிக்காரர்களையும் அவர் சரிகட்டிவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் துளசேந்திரபுரம் கிராம மக்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக உள்ளது.“அதிபராக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் இம்முறை மிகப்பெரிய கொண்டாட்டம் இருக்கும்,” என்று கிராமக் குழுவின் உறுப்பினரான கே. கலியபெருமாள் தெரிவித்தார்.அவரது பெயர் முன்மொழியப்பட்டால் இந்தியாவின் கிரிக்கெட் குழுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புபோல பிரம்மாண்டமாக இருக்கும் என்றார் அவர்.
ஐந்து வயதில் கமலா ஹாரிஸ் துளசேந்திரபுரம் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அந்தக் கிராமத்திலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை கடற்கரையில் தாத்தாவுடன் நடந்து சென்றதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.ஆனால் துணை அதிபரான பிறகு இதுவரை அவர் கிராமத்தின்பக்கம் திரும்பவில்லை.
அவர் மீண்டும் கிராமத்துக்கு வருவார் அல்லது கிராமத்தின் பெயரை தமது உரையில் அல்லது அறிக்கையில் குறிப்பிடுவார் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதுவரை இது நிகழவில்லை என்று ஏறக்குறைய 2,000 மக்கள் வசிக்கும் துளசேந்திரபுரம் கடை உரிமையாளரான ஜி. மணிகண்டன் சொன்னார்.
இது, கிராம மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவரது குடும்பம் 1930களிலேயே அமெரிக்காவில் குடியேறிவிட்டதை கமலா ஹாரிஸ் தாத்தாவின் குலதெய்வ கோயிலை நிர்வகிக்கும் எஸ்.வி. ரமணன் கூறினார்.
“அமெரிக்கராக கிராமத்தின் உற்சாகத்தை கமலா ஹாரிஸ் அறியாமல் இருக்கலாம். ஆனால் குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரைக்காக நீங்கள் ஏன் கை தட்டுகிறீர்கள், கத்துகிறீர்கள்,” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.