நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!
வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்தது.
கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று மாலை இணைய வழியில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்தனர்.
இணைய வழியில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்து உறுப்பினர்களுமே ஏகமனதாக இந்த முடிவுக்கு வந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் இணைய வழியில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத் தீர்மானம் எடுக்கப்பட்ட சமயம் இணைய இணைப்பில் இருந்து வெளியேறி இருந்தார்.
எனினும் அதற்கு முன்னர் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்ட அவர்,கட்சி எடுக்கும் முடிவுக்குத் தான் முழுமையாக கட்டுப்பட்டுச் செயற்படுவார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அதனை ஆதரித்து கட்சியின் சார்பில் மருத்துவர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன் ஆகியோர் உரையாற்றுவர் என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.





