சாதனை படைத்த கிளிநொச்சி மாணவனுக்கு தமிழரசுக் கட்சி பாராட்டு!
உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரனை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK கௌரவித்துள்ளது.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவன் திருக்குமரனின் இல்லத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் M.A. Sumanthiran நேரில் விஜயம் செய்தார்.
இதன்போது, மாணவனின் சாதனையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக விசேட வாழ்த்து மடல் ஒன்றையும் வழங்கிக் கௌரவித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்திலிருந்து கடின உழைப்பின் மூலம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமை தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் முன்னுதாரணம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சந்திப்பின் போது மாணவனின் பெற்றோர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்





