“13” குறித்து இந்தியா மௌனம்: மனம் திறந்தார் டில்வின் சில்வா!
“ இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பில் இந்திய தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவும் இல்லை.”
இவ்வாறு ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தியா சென்றிருந்தனர்.
நாடு திரும்பிய நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு இந்திய விஜயம் தொடர்பில் டில்வின் சில்வா நேர்காணல் வழங்கி இருந்தார்.
இதன்போது இலங்கை தரப்பினருடன் நடைபெறும் சந்திப்புகளின்போது அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை தொடர்பில் இந்திய தரப்பினர் வலியுறுத்துவது வழமை.
எனவே, தங்களின் விஜயத்தின்போது மாகாணசபை பற்றி பேசப்பட்டதா” என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த டில்வின் சில்வா ,
“ இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் சந்தித்தோம். குஜராத் மாநிலத்துக்கு சென்று அம்மாநில முதல்வருடன் பேச்சு நடத்தினோம். கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வருடனும் கலந்துரையாடினோம்.
மேற்படி சந்திப்புகளின்போது மாகாணசபை உள்ளிட்ட மேற்படி காரணங்கள் தொடர்பில் பேசப்படவில்லை. அபிவிருத்தி தொடர்பில்தான் கலந்துரையாடப்பட்டன.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதும் இது பற்றி பேசப்படவில்லை நினைவூட்டல்கூட செய்யப்படவில்லை.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என நாம் கூறவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.
பொருளாதார அபிவிருத்தி அதற்குரிய தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகின்றது.
எனவே, எமது விஜயத்தின்போது பொருளாதார முன்னேற்றமே முதன்மை காரணியாக இருந்தது.
எனினும், இலங்கையில் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளவர்களே இரகசிய ஒப்பந்தம் என்றும், அதற்கான ஆரம்பக்கட்டமே இவ்விஜயம் எனவும் கதைகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.” – என டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.





