சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இணக்கப்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
மதிப்பாய்வு, IMF இன் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக் குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதானி பீட்டர் ப்ரூவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையினால் அமுல்படுத்தப்பட்ட சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் கிடைத்துள்ள பெறுபேறுகள் போற்றத்தக்கவை எனவும், இதன்மூலம் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதெனவும் தெரிவித்தார்.