மகளின் விவாகரத்தை கொண்டாடிய தந்தை!
தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியக் குடும்பங்களில் விவாகரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாக பார்க்கப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர சர்மா , உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். அவரின் மகளின் பெயர் பிரணிதா.
இவருக்கும் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் கவுரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் புகுந்த வீட்டில் பிரணிதா தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதனால், பிரணிதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு விவாகரத்து கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனால் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்த தந்தை ஞானேந்திர சர்மா மற்றும் உறவினர்கள், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாகக் கொண்டாடினர்.
அங்கிருந்தவர்களுக்கு லட்டுகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




