அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ் தற்போது விற்றுவிட்டார் – உதயநிதி
“கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார்” என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
“ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அதிமுக ஆட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019 இல் அவர்களே நிறுத்திவிட்டனர். ஆனால் முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்று,
அவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணிகளை வழங்கினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தலை காட்டி அதிமுக, பாஜக நிறுத்த சதி செய்தது. அதனை முறியடித்து 5,000 ரூபா கொடுத்தார் முதல்வர். காலை 6.30 க்கு அனுப்பிய பணத்தை,
குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி மோடி எடுத்துவிடுவார் என்ற பயத்தில் காலை 09 மணிக்கே
பெண்கள் எடுத்துவிட்டனர். இந்த முறை 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
முதல்வர் சொல்வது போன்று இந்த தேர்தல் தமிழகத்துக்கும், டெல்லிக்குமானது. இதில் டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு நாம் கேட்ட நிதியை கூட கொடுக்கவில்லை.
பட்ஜெட்டில் கூட எந்த திட்டமும் தமிழகத்துக்கு இல்லை. இதனால் நேரடியாக வந்தால் தமிழக மக்கள் விடமாட்டர் என்று, அதிமுக என்ற போர்வையை போர்த்திக் கொண்டு பாஜக வருகிறது. அவர்களை தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது.




