இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெற்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், மகேஷ் தீக்ஸன 2 விக்கெட்டுக்களையும், டில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்படி 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இது இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர்ச்சியாகப் பெற்ற 12 ஆவது இருபதுக்கு 20 வெற்றி ஆகும்.
மேலும், இப்போட்டியானது இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பெற்ற 6 ஆவது தோல்வியாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய போட்டியுடன், உலகக் கிண்ணப் போட்டிகளில் இரு நாடுகளுக்கும் இடையில் 7 போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் இலங்கை ஒரேயொரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.





