போர் சூழலில் தேசிய பாதுகாப்பு குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்: சஜித்!
“உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நாடாக நாம் நாடு குறித்தும், தேசிய பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், உலக அமைதிக்காக பாடுபடுவதே நமது நாட்டின் கொள்கையாக அமைந்து காணப்பட வேண்டும்.
நம்பிக்கை சீர்குலைந்து காணப்படுவதன் காரணமாக இன்று போர்ச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டின் தேசிய அபிலாஷை, 220 இலட்சம் மக்களைப் பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை நிலைநிறுத்தி, சமநிலையான முறையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அர்ப்பணித்த நாடாக நடந்து கொள்ள வேண்டும்.” எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.
“சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு ஏற்ப கொள்கையின் அடிப்படையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சர்வதேச மனித உரிமைக் கடமைகளை செயற்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.





