படுதோல்வியடைந்த CSK – காரணம் கூறும் கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள் இருந்தது இல்லை. SRH போன்ற அணிகள் போல மிகப்பெரிய ஸ்கோர் இல்லை. ஆனாலும் 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. அந்தளவுக்கு எதிரணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் CSK வீரர்கள் கில்லாடிகள் என கூறப்படுவதுண்டு.
சுரேஷ் ரெய்னா, ஃபாப் டுபிளெசி, பிராவோ, ஜடேஜா , விக்கெட் கீப்பிங்கில் தோனி என எதிரணி ரன் குவிக்க நிற்கும் போது சூறாவளியாய் சுழன்று ரன்களை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் முன்னாள் CSK வீரர்கள். தற்போது ஜடேஜா, தோனி விளையாடுகிறார்கள். ஆனால், பழைய CSK அணி போல பீல்ட்டிங்கை பார்க்க முடிவதில்லை என்பதே ரசிகர்ளின் அதிருப்தியாக உள்ளது. அதிலும் ஆட்டத்தின் இறுதி வரை யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற பதட்டம் இருக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் அதுவும் மிஸ்ஸிங்.
நேற்று நடந்த CSK vs RCB ஐபிஎல் 2025 போட்டியில், CSK அணியினர் செய்த மோசமான பீல்டிங்கால் 20 ஓவரில் பெங்களூரு அணி 196 ரன்கள் எடுத்தது. சென்னை சேப்பாக்கம் போல மெதுவான பிட்சில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறி 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சென்னை அணியின் தோல்விக்கு பீல்டிங் முக்கிய காரணம் என CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறிவிட்டார்.
ஆட்டத்தில் RCB அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பல முக்கியமான கேட்ச்களை தவறவிட்டனர். இது RCB அணி சேப்பாக்கத்தில் 196 ரன்கள் என்ற இமாலய ஸ்கோருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ரவீந்திர ஜடேஜா வீசிய 11வது ஓவரில், கேப்டன் ராஜாத் பட்டிதார் ஒரு உயரமான ஷாட்டை ஆடினார். பந்து லாங்-ஆஃப் பகுதியை நோக்கி சென்றது. அங்கு ஃபீல்டிங் தீபக் ஹூடாவுக்கு இது ஒரு எளிய கேட்சாக இருந்தது. ஆனால் அவர் பந்தை தவறவிட்டார். அப்போது பட்டிதார் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனை அடுத்து பட்டிதார் 51 ரன்கள் வரை எடுத்து ஆட்ட நாயகன் விருதே வாங்கிவிட்டார்.
நூர் அகமது வீசிய 12வது ஓவரில், பட்டிதார் மீண்டும் ஒரு உயரமான ஷாட்டை ஆடினார். பந்து லாங்-ஆன் பகுதியை நோக்கி சென்றது. இந்த முறை ராகுல் திரிபாதி அதை பிடிக்க முயன்று தவறவிட்டார். அப்போது பட்டிதார் 19 ரன்களில் இருந்தார். இது CSK-க்கு இரண்டாவது அடியாக அமைந்தது. அடுத்து, அதே ஓவரில் பட்டிதார் அடித்த பந்து எட்ஜ் ஆகி கலீல் அகமது நோக்கி சென்றது. அதனை டைவ் செய்து பிடிக்க முயன்று முடியாமல் போனது . அப்போது பட்டிதார் ரன் 20 தான்.
ரவீந்திர ஜடேஜா வீசிய 7வது ஓவரில், படிக்கல் ஒரு பந்தை டீப் மிட்விக்கெட் பகுதியை நோக்கி அடித்தார். பந்து எல்லைக்கு அருகில் சென்றபோது, CSK வீரர் சாம் கரன் அந்த பந்தை நோக்கி ஓடுவதில் சிறிது தாமதமானார். மேலும் பந்தை திருப்பி எறியும் முன் ஒரு கணம் தயங்கினார். இதனால், படிக்கல் மற்றும் விராட் கோலி இரண்டு ரன்களை எளிதாக எடுத்தனர். இது ஒரு எளிய ஒரு ரன்னாக முடிந்திருக்க வேண்டிய சூழலில், CSK-யின் மெதுவான பீல்டிங் காரணமாக கூடுதல் ரன் வழங்கப்பட்டது.
இவ்வாறாக மேலும் சில ஃபீல்டிங் சொதப்பல்கள் அரங்கேறின. இதனை குறிப்பிட்டு போட்டி தோல்விக்கு பின்னர் பேசிய CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஃபீல்டிங் சொதப்பல்கள் ஆட்டத்தின் போக்கை RCB பக்கம் திருப்பியது. 20 – 30 ரன்கள் அதிகமாக முடித்துவிட்டனர். அங்கு 170 தான் அதிகபட்சமாக அடிக்க முடியும். அடுத்து 2ஆம் இன்னிங்சில் மைதானம் மெதுவாகி விட்டது. பவர்ப்ளெயில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை என பேசினார். இதனை குறிப்பிட்ட ரசிகர்கள், இது எங்கள் பழைய CSK அணி இல்லை. என தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.