நத்தார் தினத்தில் பிரித்தானியாவை வாட்டும் கடும் குளிர் – முதியவர்களுக்குச் சுகாதாரத்துறை எச்சரிக்கை
பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் வேல்ஸில் இன்று கடும் காற்றுடன் கூடிய குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்பொழியுடன் கூடிய ‘வெள்ளை நத்தார்’ (White Christmas) அமையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், இம்முறை வறண்ட மற்றும் குளிரான வானிலையே நிலவுகின்றது.
இதேவேளை, நத்தார் விடுமுறைப் பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில், M2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் லண்டன் நோக்கிய போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
மேலும், பராமரிப்புப் பணிகளுக்காக M27 நெடுஞ்சாலை ஜனவரி 4-ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், வாகனங்களைச் சரிபார்த்துப் பயணங்களைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





