பயோமெட்ரிக் சோதனைகளில் தாமதம் – பயணிகளுக்கு தற்காலிக நிம்மதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நுழைவு மற்றும் வெளியேறுதல் அமைப்பு (EES) அமுலுக்கு வரவுள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்பவர்கள்
புதிய பயோமெட்ரிக் சோதனைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என துறைமுகங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பயோமெட்ரிக் தகவல்கள் கட்டாயமாக சேகரிக்கப்படும்
என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிரான்சில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இன்னும்
முழுமையாக தயார் செய்யப்படாமையால், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் ரயில்,
படகு மற்றும் ஷட்டில் பயணங்களில் புதிய சோதனைகள் உடனடியாக அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டோவர் துறைமுகம் மற்றும் யூரோடன்னல் சேவைகள் வழமைபோன்று
செயல்படும் என்றும், பயணிகளின் கடவுச்சீட்டுகளில் கைமுறை முத்திரை பதிக்கும்
நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐரோப்பா முழுவதும் சில விமான நிலையங்களில் ஏற்கனவே EES சோதனைகள்
தொடங்கியுள்ளதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஈஸ்டர் விடுமுறை காலத்தில் இந்த தாமதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என விமான நிறுவனங்களும்
விமான நிலையங்களும் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், பயணிகள் எல்லை சோதனைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
EES அமைப்பு முழுமையாக அமல்படுத்தப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டாலும்,
எதிர்காலத்தில் பயோமெட்ரிக் சோதனைகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




