அக்குரேகொட இரட்டை படுகொலை விவகாரம் : பணிப்புறக்கணிப்பில் சட்டதரணிகள்!
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று (16) பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்து, கண்டனப் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த இரட்டைப் படுகொலையை வன்மையாகக் கண்டித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தினால், கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தன. சட்டத்தரணிகள் எவரும் இன்று நீதிமன்றக் கடமைகளில் ஈடுபடாது தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால், வழக்கு விசாரணைகள் அனைத்தும் தடைப்பட்டன.

நீதித் துறையைச் சார்ந்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தகைய வன்முறைகள் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.






