இலங்கையில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்
எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அதன் தாக்கம் மக்கள் மீது பெரிய அளவில் இருக்கும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போது வரி விதிக்கப்படாத பல வகைப் பொருட்களுக்கு வரி விதிப்பதாலும், ஏற்கனவே வரி விதிக்கப்படும் பொருட்களின் மீதான வரிச்சுமை அதிகரிப்பதாலும் எதிர்காலத்தில் பணவீக்கம் உயரும் என பேராசிரியர் தெரிவித்தார்.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவுகளை மக்கள் ஏற்கனவே அனுபவித்து விட்டதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் ஏற்கனவே பொருட்களை சேமித்து வைத்து பின்னர் விற்பனை செய்ய முற்படுவதாக பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
வரி விதிப்பதன் மூலம் வர்த்தகர்கள் தேவையற்ற அனுகூலங்களைப் பெறுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.