நிலச்சரிவில் சிக்கி உயிரோடு மண்ணில் புதைந்த 7 சுரங்கத் தொழிலாளர்கள்; ஜாம்பியாவில் சோகம்!!
ஜாம்பியா நாட்டில் தொடர் மழை காரணமாக, தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதோடு 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் நுழைந்து கனிமங்களை எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆபத்தான முறையில் இந்த சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனிடையே ஜாம்பியா நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சுரங்கம் அமைந்துள்ள சிங்கோலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோதமாக தொழிலாளர்கள் தாமிர சுரங்கத்திற்குள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு முகப்பு பகுதி மண்ணில் புதைந்தது.
இதனால் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். எவ்வளவு பேர் சுரங்கத்திற்குள் இருக்கிறார்கள் என்ற தகவல் சரிவர தெரியாத நிலையில், 7 பேர் மண்ணிற்குள் புதைந்து உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கி இருக்கலாம் எனவும் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஹகைண்டே ஹிச்சிலெமா, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை அங்கிருந்து உடல்கள் எதுவும் மீட்கப்படாத நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.