பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரக் கடிதம் கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், ரிஷி சுனக் அங்கே பிரதமராக இருந்து வருகிறார். சில வாரங்களில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்த நிலையில், இக்கட்டான சூழலில் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.அப்போது பிரிட்டனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த நிலையில், அதை தீர்க்க ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும், அங்கே அவருக்கு பல்வேறு சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கிறது.
சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள் துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரேவர்மேன் சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். அது ரிஷி சுனக் அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இதையடுத்து ரிஷி சுனக் நேற்றைய தினம் தான் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேனை டிஸ்மிஸ் செய்த நிலையில், இப்போது அவர் மற்றொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதாவது ரிஷி சுனக்கிற்கு எதிராக இப்போது அவரது சொந்த கன்சர்வேடிவ் கட்சி எம்பி ஒருவரே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் கடிதம் கொடுத்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் ரிஷி சுனக்கிற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான கடிதத்தைக் கொடுத்துள்ளார். இந்த ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளர் ஆவார். போரிஸ் ஜான்சனுக்கும் ரிஷி சுனக்கிற்கும் எப்போதும் ஆகாது. ரிஷி சுனக்கிற்கு பிரதமர் பதவி செல்வதைத் தடுக்க போரிஸ் தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் பார்த்தார்.
அதன் பிறகுச் சற்று அமைதியாக இருந்த போரிஸ் ஜான்சன், இப்போது சரியான நேரம் கிடைத்தவுடன் தனது ஆதரவாளரை வைத்து ஆட்டத்தைத் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரிஷி சுனக்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், அவருக்குப் பதிலாக உண்மையான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ஒருவரைப் பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அனுபவித்த வரை போதும்.. நான் எனது நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த கடிதத்தை சமர்பித்துவிட்டேன். ரிஷி சுனக் போகும் நேரம் வந்துவிட்டது. வேறு ஒரு நல்ல கன்சர்வேடிவ் தலைவர் நாட்டை வழிநடத்தட்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.மேலும், ரிஷி சுனக் மீது அவர் சரமாரியாகப் புகார்களையும் முன்வைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முடங்கி நின்ற போது துணிச்சலாகப் போராடியவர் தனது தலைவர் போரிஸ் ஜான்சன் என்று குறிப்பிட்ட அவர், அப்படி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ரிஷி சுனக் தான் நீக்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், உண்மையைப் பேசியதற்காகவே உள் துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் ரிஷி சுனக் இடதுசாரியாக மாறுவதாகவும் சாடியுள்ளார். பிரிட்டனில் ரிஷி சுனக் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், புதிய குடைச்சலாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சேர்ந்துள்ளது.