இலங்கையில் வெளிநாட்டு வைத்தியர்கள் பணியில் அமர்த்தப்படலாம்!
வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
“பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது வீட்டுவசதி அல்லது அது போன்ற காரணங்களுக்காக அல்ல, அவர்களில் பெரும்பாலானோர் அதிக வரி மற்றும் நாட்டில் நிலவும் நிலையற்ற தன்மையால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரை நாட்டை விட்டு வெளியேறி வைத்தியசாலை எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.