இலங்கை செய்தி

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு!

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விரிவாகத் தெரியப்படுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநருக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, வன்னிப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளமையைக் குறிப்பிட்ட அவர், அவற்றைத் துரிதமாகப் புனரமைத்து மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்த வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக விசேட நிதித் தேவைப்பாடுகள் உள்ளமையைப் பிரதி அமைச்சரிடம் ஆழமாக வலியுறுத்தினார்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்து நேரத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அதிவேகப் பாதைக்கு மேலதிகமாகப் போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதற்கான ஏனைய மாற்றுத் திட்டங்கள் குறித்தும் பிரதி அமைச்சரும் ஆளுநரும் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், அந்த நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி இந்த ஆண்டுக்குள் விரைந்து நிறைவு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விசேட கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!