இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை – டெல்லியை விட்டு வெளியேறும் வெளியேறும் மக்கள்
ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்து குடியேறியுள்ள பலருக்கு சிலிண்டர்கள் கிடைக்காமையால்
அதிக விலை கொடுத்தும் வாங்க முடியாத நிலையில் பலர் சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர்.
பழைய டெல்லி ரயில் நிலையத்தில் சான்ஜுக்டா என்ற பெண் தனது குடும்பத்தாருடன் டெல்லியை விட்டு தனது சொந்த கிராமத்துக்குச்
செல்வதாகத் தெரிவித்தார்.
அந்த பெண் மேலும் தெரிவிக்கையில்,
“டெல்லியின் நங்லோய் பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது வேலையும் இல்லை. சமையல் காஸ் சிலிண்டரும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை வாங்க எங்களால் முடியவில்லை. நான் சமையல் வேலை செய்து வருகிறேன். எனது கணவரும் கூலி வேலைக்குச் செல்கிறார். எனக்கு தினந்தோறும் ரூ.200 மட்டுமே கிடைக்கிறது.
சமையல் காஸ் சிலிண்டர்(5 கிலோ) ரூ.600 க்கு விற்பனை செய்கின்றனர். அதனை வாங்க முடியவில்லை. அதனால் தற்போது கிராமத்துக்குச் செல்கிறோம்.
சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்காததால் டெல்லியில் திருமணங்கள் நடைபெறுவதும் குறைந்துள்ளது.
இதனால் சமையல் வேலை கிடைப்பதில்லை. நான் வேலை பார்த்து வந்த கம்பெனியையும் மூடிவிட்டனர்
எனவே, ஹரியானாவின் போரியா மாவட்டத்திலுள்ள எனது சொந்த கிராமத்துக்குச் செல்கிறேன். அங்கு எப்படியாவது சமாளித்துக் கொள்வேன்’’ என்றார்.
டெல்லி மட்டுமல்லாமல் நாட்டின் பல நகரங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது என்று சுபாஷ் நகரைச் சேர்ந்த வினோத் குமார்(38) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது,
“நான் கூலி வேலைக்குச் செல்கிறேன். தினந்தோறும் 400 ரூபா கிடைக்கும்.
ஆனால் இப்போது வேலை கிடைப்பதில்லை. எனவே, பிஹாரில் உள்ள தர்பாங்காவுக்குச் செல்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும். காஸ் சிலிண்டர் கிடைக்காததால் எனது மனைவி மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்கிறார்.
இதனால் வீட்டில் புகை சூழ்ந்துகொள்கிகிறது. எனக்கு இருமல் பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டு உரிமையாளர் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்’’ என்றார்.





