மனித உரிமை விவகாரம் குறித்து ஐ.நா. பிரதானியுடன் பிரதி அமைச்சர் பேச்சு!
பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்சுடன் Marc-André France நடைபெற்ற சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக பின்வரும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
நாட்டின் முன்னுரிமைக்குரிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்.
தற்போதைய பொருளாதார சவால்களை முறியடிப்பதற்கான முயற்சிகள் மற்றும் அதற்குரிய ஒத்துழைப்புகள்.
அரச நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துதல்.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பேணுவதில் இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதி அமைச்சர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகளுடனான நீண்டகால பங்காளித்துவத்தை இலங்கை உயர்வாக மதிக்கின்றது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மீளெழும் திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை நோக்கிய பயணத்தில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் இதன்போது பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.





