போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை- கைதானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்தது
முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது.
நாடு முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 99,540 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து 137 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 1,973 நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 1,639 சந்தேக நபர்கள் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, அதிகாரிகள் 524 கிலோ 906 கிராம் ஹெராயின் மற்றும் 1,416 கிலோ 41 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன், 11 கிலோ 674 கிராம் கஞ்சா, 199 கிலோ 864 கிராம் கோகோயின், 121 கிலோ 962 கிராம் ஹாஷிஷ் மற்றும் 932,976 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 100,247 சோதனைகளில் இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





