பொன்சேகா வெத்து வேட்டு: மஹிந்த அணி கொதிப்பு!
“ முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா Sarath Fonseka கூறும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தெரிவித்துள்ளது.
மக்களுக்காக அரசியல் செய்யும் நபர் அவர் அல்லர் எனவும், பகைமை அரசியலையே முன்னெடுத்துவருகின்றார் எனவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
இறுதிப்போரின்போது புலிகள் சரணடைவதற்கு மஹிந்த ராஜபக்ச சந்தர்ப்பமளித்தார் என பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது. எனினும், இராணுவத்தினரிடம் சரணடைய சொன்னதால் அத்திட்டம் தோல்வி அடைந்தது எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ போர் முடிவடையும்வேளை இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரு விடயத்துக்காக மட்டுமே பொன்சேகாவை மதிக்கின்றோம்.
அரசியல் ரீதியில் அவர் பெறுமதியற்ற நபர். மக்களுக்காக அல்லாமல், தனிப்பட்ட பகைமையை தீர்க்கவே அரசியல் செய்கின்றார்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.





