கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!
திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது.
இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது
இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார்.
இதன்படி மீளவும் நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற பிணை வழங்கல் உத்தரவிற்கு இணங்க எதிராளிகள் விடுவிக்கபட்டனர்.
இதன்படி பலாங்கொட கஸ்ஸப்ப தேரர்,கல்யாணவன்ஸ திஸ்ஸ தேரர்,சுகித்தவன்ஸ திஸ்ஸ தேரர்,நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட தீபானி லியனகே,விதுரங்க லொக்கு கலப்பதி,எல்.ரீ.பெரேரா,பியல் பிறேமசிறி,குணதிலக்ககே தெக்கும் துலார குணதிலக்க,திக்மன் ஜெயந்த ஆகியோரும் பொதுமக்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தலா 10 ஆயிரம் ரூபா காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அனைத்து எதிராளிகளும் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும்,
சாட்சிகளை பயமுறுத்த கூடாது,பிரதேசத்தின் பொது அமைதி மற்றும் சமய சகவாழ்விற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளும் மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தையில் ஒன்றோ அல்லது அனைத்துமோ எதிராளிகளால் மீறப்பட்டால் பிணை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியல் நடைமுறைக்கு வரும் எனவும் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும்.
திருகோணமலை நிருபர் – அப்துல்சலாம் யாசீம்








