வலுவடைந்துவரும் யூரோவின் மதிப்பு – வட்டி விகிதங்களைக் குறைக்க இத்தாலி கோரிக்கை
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி வலியுறுத்தியுள்ளார்.
யூரோவின் வலுவான மதிப்பு தங்கள் நாட்டின் ஏற்றுமதியாளர்களைப் பாதித்து வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“அமெரிக்கா விதித்த கட்டணங்களுக்கு மேலதிகமாக, பலவீனமடைந்து வரும் டாலரும், வலுவான யூரோவும் நமது ஏற்றுமதியாளர்களைச் சிரமத்தில் ஆழ்த்துகின்றன. அமெரிக்க மத்திய வங்கி போல, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதங்களை மேலும் குறைத்து, யூரோவின் வலிமையைக் குறைக்க உதவ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூரோவைப் பயன்படுத்தும் 20 நாடுகளுக்கான மத்திய வங்கி, வியாழக்கிழமை வட்டி விகிதங்களை இரண்டு சதவீதத்தில் நிலையாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கைச் சுற்றியே இருப்பதாகவும், யூரோ மண்டல வளர்ச்சிக்கான பாதிப்பு அபாயங்கள் குறைந்துவிட்டதாகவும் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.





