ஆன்லைன் துஷ்பிரயோகம் குறித்து புகார் அளித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா

நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்களிடமிருந்து இணையவழி துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் மற்றும் ஆபாசமான செய்திகளை எதிர்கொண்டதை அடுத்து, நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் பெங்களூரு காவல் ஆணையரிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் கடுமையாக கருத்து தெரிவித்ததை வரவேற்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது.
“இந்தியாவின் சாமானிய மக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நம்பிக்கைக் கதிர். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று திருமதி ஸ்பந்தனா பதிவிட்டிருந்தார்.
ரேணுகாசாமி குடும்பத்தினரின் நீதிக்கான தேடலுக்கு ஆதரவாக வந்த அவரது கருத்து, தர்ஷனின் ஆதரவாளர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, திவ்யா ஸ்பந்தனா கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங்கிடம், ஆன்லைன் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சமூக ஊடக தளங்களில் இருந்து ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீக்கவும் கோரி அணுகினார்.
கர்நாடக மாநில மகளிர் ஆணையம், நகர காவல்துறை உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் இந்த கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.