தோல்விக்கு ஹர்திக் பாண்டியா காரணமா? முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரை இந்திய மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று கைப்பற்றவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா தான் 40 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், தற்போது தோல்விக்கு அவரும் முக்கிய காரணம் என முன்னாள் கிரிகெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணமே, ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். அவர் மெதுவாக விளையாடிய காரணத்தால் ரன்ரேட் அதிகமாகி கொண்டு இருந்த காரணத்தால் மற்ற வீரர்கள் சவாலான சிக்ஸர்கள் அடிக்க சென்று ஆட்டமிழந்தனர். எனவே, அவர் மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பேசியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அளித்த பேட்டியில் பேசும்போது ” ஹர்திக் பாண்டியா தனது மெதுவான பேட்டிங் காரணமாக மற்ற வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எதிர்பார்க்காத டாட் பால்களை அவர் நிறைய விளையாடினார். இது தான் தோல்விக்கான காரணமாக நான் பார்க்கிறேன்.
நீங்கள் செட்டில் ஆக டி 20 போட்டிகளில் பந்துகளை எடுக்க முடியாது. உங்களால் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்க முடியாவிட்டால், நீங்கள் சிங்கிள்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும். அதனைவிட்டு விட்டு இப்படியா விளையாடுவது”என கோபத்துடன் பேசினார்.
அவரை போல இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ” இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணமே ஹர்திக் சிறந்த நிலையில் இல்லை. பேட்டிங் ஆர்டர் சரியில்லை என்றும் உணர்கிறேன். அவருக்கு முன்பே ஜூரலை இறக்கியிருக்கலாம் என நான் விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு அந்த இடத்தில் வாய்ப்பு வழங்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.