சைஃப் அலிகானைத் தாக்கியதாக நம்பப்படுபவர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்: மும்பை நகர காவல்துறை
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் அநேகமாக பங்ளாதேஷைச் சேர்ந்தவர் என்று மும்பை நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) அறிக்கை ஒன்றின் மூலம் காவல்துறை அத்தகவலை வெளியிட்டது. காவல்துறை பறிமுதல் செய்த சந்தேக நபரின் உடைமைகளில் இருந்த குறியீடுகள் மூலம் இது தெரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றிக்கொண்டதாகக் கருதுப்படுகிறது என்றும் மும்பை காவல்துறை குறிப்பிட்டது என்று இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் கூறியுள்ளன.
சந்தேக நபர் 30 வயது முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்ஸாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காவல்துறை இணை ஆணையர் திக்சித் கேடாம் கூறினார். கொள்ளையடிக்கும் நோக்கில் சந்தேக நபர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் புகுந்தார் என்று நம்பப்படுவதாகவும் அவர் சொன்னார்.
“தற்போது அவர் தன்னை விஜய் தாஸ் என்ற பெயரில் அடையாளப்படுத்திக்கொள்கிறார். அவர் ஐந்திலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை வந்தார். சில நாள்கள் மும்பை நகரில் இருந்த பிறகு அவர் அருகிலிருந்த பகுதிகளில் வசித்து வந்தார். சந்தேப நபர், வீட்டுச் சுத்திகரிப்பு, ஒழுங்கு நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார்,” என்று சிக்சித் கேடாம் தெரிவித்தார். முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்ஸாத் எனும் நம்பப்படும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படுவார் என்றும் அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்குமாறு எடுத்துரைக்கப்படும் என்றும் திரு திக்சித் கேடாம் சொன்னார்.
கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) சைஃப் அலிகான் மீது அவரின் வீட்டில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் ஆறு கத்திக்குத்துக் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.