கச்சதீவு திருவிழாவில் 3,996 தமிழக யாத்திரிகள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நாளைமறுதினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர்.
இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
92 விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 589 பேரும், 26 நாட்டுப் படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர்.
தமிழகத்திலிருந்து புறப்படும் யாத்திரிகர்கள் நாளைமறுதினம் காலை இராமேஸ்வரத்தில் முறையான சோதனைகளை முடித்துக்கொண்டு கச்சதீவு நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடாக, அவர்கள் பயணிக்கவுள்ள அனைத்துப் படகுகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் நாளையுமாக இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து யாத்திரிகர்களுக்கான குடிதண்ணீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கச்சதீவில் ஏற்கனவே தயார் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





