மலேசியாவில் உல்லாச தலம் ஒன்றில் நச்சு உணவால் 22 மாணவர்கள் அவதி
மலேசியாவில் உள்ள ‘செட்டியூ’ உல்லாசத் தலத்தில் காலை உணவு உண்ட பிறகு வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டதாக 22 மாணவர்கள் புகார் அளித்தனர்.
‘எஸ்எம்கே குன்தொங்’ பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள், உல்லாசத் தலத்தில் நடைபெற்ற முகாம் ஒன்றில் ‘எஸ்பிஎம்’ தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருந்ததாக திரங்கானு கல்வி இயக்குநர் ஜெலானி சூலோங் கூறினார்.
முதலில் எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ‘செட்டியூ’ மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் வயிற்றுவலியால் அவதியுற்றதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருந்தகம் ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.“அதன் பிறகு, மேலும் 12 மாணவர்கள் நச்சு உணவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று ஜெலானி கூறினார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, செட்டியூ மாவட்ட சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனைகளை நடத்தி, மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவின் மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தங்கவேண்டியிருந்தார் என்றும் மற்றவர்கள் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் அவர் கூறினார்.“இந்தச் சம்பவம் விசாரணைக்காக சுகாதார அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.