“டிஜிட்டல் மயமாக்கல்” – ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!
“டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாகும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கூறியவை வருமாறு,
“பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம்.
எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
பொருளாதார மாற்றம்
எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நாம் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறோம்.
அதாவது எமது பரிமாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தரவுகளை முறையான வெளிப்படைத்தன்மையுடன் திரட்டத் தவறியுள்ளோம்.
எமது அரசாங்கக் கொள்கையின்படி, மானியங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த இலக்குடைய மக்களை எவ்வாறு தெரிவு செய்வது என்ற சவாலை நாம் எதிர்கொள்கிறோம்.
மத்திய கிழக்கு நெருக்கடி
உதாரணமாக, மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்தது. இதனை நாம் இரண்டு கோணங்களில் பார்த்தோம்.
எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும்.
விலையை அதிகமாக உயர்த்தினால் பொருளாதாரம் சுருங்கும். மறுபுறம் விலையைச் சரியாகச் சீரமைக்காவிட்டால் நிறுவனக் கட்டமைப்பைத் தொடர முடியாத நெருக்கடி ஏற்படும்.
எனவே, இதனைச் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானது தகுதியான மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாகும். ஆனால் அதற்கான தரவுகளைத் திரட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மானியம்
இந்த மானியத்தால் அதிக பலன் பெறுவது யார்? கிராமத்தில் ஒருவர் 05 லீட்டர் டீசல் பெற்றால் அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லிட்டர் அடித்தால் அவருக்கு 10,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவுகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு பணப்பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தப் பரிமாற்றங்கள் ஒருவரின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும்.
அதன் அடிப்படையில் மானியம் வழங்குவதற்கான ஒரு அளவுகோலை உருவாக்கலாம்.
எனவே, இத்தகைய சிக்கலான பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறைமை மூலமான பரிமாற்றங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். அப்போதுதான் மானியங்களைச் சரியான இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
எனவே, ஒவ்வொரு துறையிலான பரிவர்த்தனைகளும் இந்த டிஜிட்டல் முறைமையில் சேர்க்கப்பட வேண்டும்.
இதன் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியும்.அதனால் டிஜிட்டல் மயமாக்கல் வேலை திட்டம் எமது பிரதான திட்டமாகும்.
டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் 15 பில்லியன் டொலர் இலக்கை நாம் கொண்டுள்ளோம். இது வெறும் டிஜிட்டல் துறையை மட்டும் உருவாக்குவதல்ல.
விவசாயம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்படும் வினைத்திறன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.
பண கலாச்சாரம்
இருப்பினும், இதனை முறையான வகையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலப்படுத்துவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். கொடுக்கல் வாங்கல்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் நம்மிடம் உள்ளது.
எமது கலாசாரத்தில் பணப்பரிமாற்றங்கள் ஒரு அங்கமாக உள்ளன. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது பணம் கொடுக்கிறோம். புத்தாண்டுக்கு பணம் வழங்குகிறோம்.
இந்த ஞசு முறைமை ஒரு கலாசாரமாக மாற வேண்டுமானால், சமூகப் பிணைப்புகளுடன் தொடர்புடைய அனைத்துப் பரிமாற்றங்களையும் இது பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் இதனை முழுமையாக ஏற்காது. என்றும் ஜனாதிபதி தெரவித்தார்.





