இன்னும் பாடம் கற்காத இலங்கை! ஜெய்சங்கரிடம் சஜித் கூறியது என்ன?
“ சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, டித்வா சூறாவளியில் (ditwa cyclone) அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (Dr. S. Jaishankar) நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்துக்கு இதன்போது எதிர்க்கட்சி தலைவர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கைக்கு முறையான அனர்த்த முகாமைத்துவ திட்டமும் (disaster management plan) துறைசார் அமைச்சொன்றை ஸ்தாபிப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ 1999 ஆம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட சூப்பர் சைக்ளோன் சூறாவளி பாதிப்பால் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்தியா தனது அனர்த்த முகாமை முறையை மாற்றியமைத்தது.
இதன்மூலம் 2013 ஆம் ஆண்டு சூறாவளியிலிருந்து 10 இலட்சம் மில்லியன் மக்களையும், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியிலிருந்து சுமார் 12 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான மாதிரியை இலங்கையும் பின்பற்றுவது சிறந்தது எனவும் அவர் பரிந்துரைத்தார்.
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் மேற்படி சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.





