பிரித்தானியாவில் விமானப் பயண முன்பதிவால் சமூகக் கொடுப்பனவுகளை இழந்த மக்கள்
																																		பிரித்தானியாவில் விமானத்தைத் தவறவிட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தைகள் நலக் கொடுப்பனவு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிக்குச் சுற்றுலா மேற்கொள்ள விமான முன்பதிவைச் செய்திருந்த அந்தப் பெண், தவிர்க்க முடியாத காரணத்தால் விமானத்தைத் தவறவிட்டுள்ளார். உள்துறை அலுவலக எல்லைத் தரவை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அந்தப் பெண் திட்டமிட்ட வகையில் ஒருவழிப் பயணமாக இத்தாலிக்குச் சென்றுவிட்டதாகத் தரவுகள் வெளிப்படுத்தியதால் இந்தக் கொடுப்பனவை நிறுத்தியுள்ளனர்.
கடந்த வருடத்தில் விமான முன்பதிவைச் செய்தபோதும், அவர் தற்போது வரையில் பிரித்தானியாவில் தங்கியுள்ளார். எனினும், அவர் இத்தாலி சென்று இன்னும் நாடு திரும்பவில்லை என்ற பதிவுகளைக் காட்டுவதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, குறித்த பெண் மோசடி செய்வதாகத் தவறாகப் புரிந்துகொண்ட அதிகாரிகள், அவருக்கான குழந்தைகள் நலக் கொடுப்பனவை நிறுத்தியுள்ளனர்.
எனினும், கடந்த சில வாரங்களில் இவ்வாறான முறையில் 23,500 பேர் சலுகைகள் நிறுத்தப்பட்டதற்கான கடிதங்களைப் பெற்றனர். இதன் காரணமாகச் சுங்க அதிகாரிகளே குழப்பம் அடைந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த பயணப் பதிவுகள் சரியாக இல்லாமை அல்லது வெறும் விமான முன்பதிவுத் தகவலை மட்டும் பயன்படுத்தியமையினால் இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தவறுகளுக்காக அரச வருமான மற்றும் சுங்கத் துறை இரண்டு முறை மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்வாறான குழப்பங்கள் ஏற்பட்டால் உரியவர்களைத் தொடர்புகொண்டு கால அவகாசத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
        



                        
                            
